திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொருந்தும். உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.
மேற்சொன்ன தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ் நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009 சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
எங்கே பதிவு செய்வது? உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும்.
திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கான கட்டணம் 100 ரூபாய். 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாதவர்கள், அடுத்த 60 நாள்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்து கொள்ள வேண்டும்.
திருமணத்தை பதிவு செய்வதற்கு தனியே படிவங்கள் இருக்கின்றன. இந்தப் படிவம் சார் பாதிவாளர் அலுவலகத்தில் கிடைக்கும். இணையத்தில் கூட கிடைக்கிறது. படிவத்தைப் பூர்த்தி செய்து, கூடவே திருமணத்தைப் பதிவு செய்வதற்கான மனுவை இணைத்து, சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் தாக்கல் செய்யவேண்டும். படிவத்தில் கணவன், மனைவி இருவரது புகைப்படங்களையும் ஒட்ட வேண்டும். கூடவே தம்பதியின் மற்றொரு புகைப்படத்தையும் இணைக்கவேண்டும்.
மேலும், தம்பதியின் வீட்டு விலாசத்துக்கான அத்தாட்சி, அடையாள அத்தாட்சி (Identity Proof) ஆகியவற்றின் நகல்களையும் வைக்கவேண்டும். திருமண அழைப்பிதழையும் உடன் இணைக்கவேண்டும். திருமணத்தை நடத்தி வைத்த மத குருமாரும்/ஐயரும் மனுவில் கையொப்பம் இட வேண்டும்.
மதகுருமாரைத் தவிர, வேறு இரு நபர்களும் மனுவில் சாட்சி கையெழுத்து போடவேண்டும். மேலும், திருமணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவில்லை, கொடுக்கப்படவில்லை, வாங்கப்படவில்லை என்றும் (இந்த விவரம் படிவத்திலேயே காணப்படுகிறது) உறுதி அளிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் அது சட்டப்படி குற்றம். தண்டனையும் உண்டு. பயந்து விடாதீர்கள். தண்டனை 1000 ரூபாய் அபராதம்.
திருமணங்கள் நடைபெறும் குறிப்பிட்ட சில கோயில்களிலேயே கூட, திருமணங்களைப் பதிவு செய்வதற்கு வழி வகை செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல் உண்டு.
நன்றி : http://www.tamilpaper.net

No comments:
Post a Comment