Saturday, 3 August 2013

உதவிப் பேராசிரியர் நியமனம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதில் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த விதிமுறைகளின்படி பணியாற்றிய முந்தைய காலத்தையும் பணி அனுபவமாகக் கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. விண்ணப்பதாரர்களின் பணி அனுபவத்திற்கு அதிகபட்Œமாக 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் என மொத்தம் 34 மதிப்பெண்களுக்கு  கணக்கிடப்பட்டு ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். அதாவது, கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணி புரிந்ததற்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கல்வித் தகுதியைப் பொருத்தவரை  பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்களும் நெட் அல்லது ஸ்லெட் தகுதியுடன் எம்.பில். முடித்திருந்தால் 6 மதிப்பெண்களும் முதுநிலை பட்டப்படிப்புடன் நெட் அல்லது ஸ்லெட் 5 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு  திருத்த அறிவிப்பை வெளியிட்டது. உதவிப் பேராசிரியர் பணிக்கு பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள தகுதி நிலையினைப் பெற்ற பிறகுதான் அனுபவப் பணி என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அதில் தெரிவித்திருந்தது. அதாவது, விண்ணப்பதாரர் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசிய தகுதித் தேர்வில் (நெட்) அல்லது மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (ஸ்லெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு, பணியாற்றிய காலம் மட்டுமே அனுபவமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி) அல்லது எம்.பிஎல். படித்து முடித்த பின்பு பணியாற்றி இருந்தால் அந்தக் காலத்தை மட்டுமே அனுபவப் பணிக் காலமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று விளக்கம் சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்பின் மூலம், முதுநிலைப் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்திருந்தால், அந்தப் பணியின் அனுபவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பது குறித்து குழப்பம் நிலவியது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளின்படியும் அரசு மற்றும் பல்கலைக்கழகம் வரையறுத்துள்ள விதிமுறைகளின்படியும் பணி அனுபவக் காலம் குறித்த விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி ஹரி பரந்தாமன் தீர்ப்பளித்துள்ளார். இதை எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் எந்தெந்தக் கால கட்டத்தில் எந்தெந்தத் தகுதி பல்கலைக்கழக மானியக் குழுவால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்பதை விளம்பரமாக வெளியிட வேண்டும்’ என்றும் அவர் இத்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கைப் போலவே, விரிவுரையாளர் அல்லது உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. பட்டம் பெற்றிருந்தாலும் நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி முதன்மைத் தகுதியாக இருக்க வேண்டும் என்று 2009-ஆம் ஆண்டு யுஜிசி அறிவிப்பாணை பிறப்பித்தபோது, அந்த ஆணைக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனை சரியானதுதான் என்று நீதிபதி சந்துரு அப்போது தீர்ப்பளித்தார்.

ஒவ்வொரு முறையும் இதுபோன்ற பணி நியமனத்தின் போதும் இது போல பிரச்சினை எழுவது குறித்து சிலரிடம் கருத்துகளைக் கேட்டறிந்தோம். சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டி.ஆர். கோபாலகிருஷ்ணன், “பல்கலைக்கழக மானியக் குழு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய தகுதி நிலைத் தேர்வை நடத்தி வருகிறது. ஆனால், பணியிடங்களை நிரப்பும்போது போதிய அளவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லை என்பதால் மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்ட போதிலும், போதிய அளவில் தகுதி நிலை பெற்றவர்கள் இல்லை என்பதால் 1993-ஆம் ஆண்டு வரை எம்.பில். முடித்திருந்தால் ஆசிரியர் பணிக்குத் தகுதி நிலை என்ற முறை கொண்டு வரப்பட்டது. 2009-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிஎச்.டி. முடித்தவர்களுக்கு நெட், ஸ்லெட் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதன் பிறகு, பணி நியமனம் பெறுபவர்கள் கட்டாயம் நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளைக் கொண்டு வந்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் விதிமுறை தளர்த்தப்பட்டு பணி நியமனம் நடைபெற்று வந்திருக்கிறது.  இதுபோல், ஒவ்வொரு முறையும் தகுதி நிலை தளர்த்தப்பட்டதே இப்போதைய குழப்ப நிலைக்குக்குக் காரணம். இனி வரும் காலத்திலாவது பணி நியமனத்தின் போது யுஜிசியின் விதிமுறைகளை தளர்த்தாமல் கட்டாயமாக நடைமுறைப்படுத்தி, தகுதிநிலை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.

 “யுஜிசி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை முதன்மையாக வைத்து தேர்வு செய்ய வேண்டும் என்று யுஜிசி சொல்கிறது. ஆனால், இங்கு பணி நியமனத்தின் போது பிஎச்.டி. முடித்தவர்களை முதன்மையாக வைத்து தேர்வு செய்கிறார்கள். தகுதி பெற்ற அனைவருக்கும் சம வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இங்கு தகுதி பெற்றவர்களை புறக்கணிக்கும் நிலை தான் தொடர்கிறது. இந்த நிலை மாற, பணி நியமனத்தில் யுஜிசி வகுத்துள்ள விதிமுறை அமைப்புகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள், பிளஸ் டூ மதிப்பெண்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மதிப்பெண்கள் போன்றவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு 85% மதிப்பெண்களும், நேர்முகத் தேர்விற்கு 15% மதிப்பெண்களும் என்ற வகையில் அமைத்து தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திறனறிவுத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுப்பது நல்லது. இப்போது அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை நியமிக்கும் போது, ஆசிரியர் தேர்வாணையம் தேர்வு நடத்தி, தேர்வு செய்கிறது. ஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பணி நியமனத்தின்போது இந்த முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஏன் இந்த இரட்டைநிலை என்று தெரியவில்லை. இனியாவது, திறனறிவுத் தேர்வு முறையினை நடத்தி, திறமையானவர்களை தேர்ந்தெடுப்பது அவசியம்” என்கிறார் விரிவுரையாளர் தகுதி பெற்றவர்கள் கூட்டமைப்பினைச் சேர்ந்த நாகராஜ்.

“கடந்த காலங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முறை விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன். நான் 1990-ஆம் ஆண்டே மாநில அளவில் நடத்தப்பெறும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் நான் பிஎச்.டி. முடிக்கவில்லை என்று என்னை நிராகரித்து விட்டார்கள். இதனால் தொடர்ந்து தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பணியாற்ற வேண்டிய நிலைக்கு ஆளானேன். ஆனால், எனக்குப் பின்பு, பலரும் பணியாற்றிக்கொண்டே, முழுநேர பிஎச்.டி. ஆய்வுக்காகப் பதிவு செய்து ஐந்தாறு ஆண்டுகளில் ஆய்வினை முடித்து அரசு வேலை வாங்கி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் பணி நியமனத்தின்போது கட்டாயமாக நெட் தேர்வில் அல்லது ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தால் இதுபோல் வேலை பெற்றிருக்க முடியாது. இனி வரும் காலத்திலாவது நெட் அல்லது ஸ்லெட் தேர்வை முடித்திருக்க வேண்டும் என்பதையும், பிஎச்.டி. படிப்பில் முழு நேரமாகப் பதிவு செய்து  கல்லூரியில் வேலை பார்த்த பணி அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்” என்கிறார் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருக்கும் அண்ணாதுரை.

“பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய தனியார் கல்லூரிகளுக்குச் சென்று பணி அனுபவச் சான்றிதழைப் பெறுவதும், கல்லூரிக் கல்வி இயக்கக துணை இயக்குநரின் சான்றினைப் பெறுவதும் அவ்வளவு எளிதாக இல்லை. இனி வரும் காலங்களில் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விவரங்களை கல்லூரிக் கல்வி இயக்ககமும் பராமரித்து வந்தால் இந்த நிலையினைத் தவிர்க்கலாம். கல்விக் கல்வி இயக்கக துணை இயக்ககத்தில் சான்று பெறச் செல்லும்போது கல்லூரி வழங்கிய மாதச் சம்பள விவரங்களைக் கேட்கிறார்கள். ஆனால், கல்லூரியில் மிகவும் பழைய சம்பள விவரங்களை வைத்திருப்பதில்லை. ஒவ்வொரு கல்லூரி அலுவலகமும் சான்றிதழ் வழங்க இழுத்தடிக்கிறது. சம்பளம் வழங்கியபோது பி.எஃப். பிடித்த விவரங்களைக்கொண்டு சென்று காண்பித்தால் ஏற்றுக் கொள்ளவதில்லை.  நான் சேலத்தில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், கல்லூரிக் கல்வி இயக்கக துணை இயக்குநர் அலுவலகம் கோவையில் இருக்கிறது. இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றிய விவரத்தைப் பெற பல ஊருக்கும் நடையாய் நடக்க வேண்டி இருக்கிறது” என்கிறார் அவர்.

No comments:

Post a Comment