Monday, 5 October 2015

பட்டாசு வேண்டாம் என்று பச்சிளம் குழந்தைகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உலக நாடுகள் அனைத்துமே  பெருகி வரும் சுற்று சூழல் மாசை குறைப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், பெருநகரங் களில் அதிகமாக மாசு ஏற்பட்டு வருவதை தடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவரும் நமது மத்திய அரசு, வரும் 2019- ம் ஆண்டுக்குள் ‘பாரத் 5-ம் நிலை’ புகை கட்டுப்பாட்டு விதிகளை வாகன உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டும் என கெடு விதித்துள்ளது. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் அவகாசம் இருக்கும் நிலையில், டெல்லியை சேர்ந்த பச்சிளம் குழந்தைகள், மாசுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தை நாடி உள்ளனர். 


நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக, டெல்லியை சேர்ந்த 6 மாதக் குழந்தைகளான ஆரவ் பண்டாரி ,அர்ஜுன் கோபால்  மற்றும் 14 மாத குழந்தையான சோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த குழந்தைகளின் தந்தைகள் வழக்கறிஞர்கள் என்பதால் அவர்கள் மூலமாக இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

அதில், ‘‘எங்களது நுரையீரல் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை. அதனால், பட்டாசு உள்ளிட்டவற்றால் ஏற்படும் கூடுதல் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது விதியின்படி ஒவ்வொரு குடிமக்களுக்கும் சுத்தமான காற்றை வழங்க வேண்டியது அவசியம். ஆனால், பண்டிகை காலங்களில் பட்டாசு உள்ளிட்டவை மூலமாக காற்று பெருமளவுக்கு மாசுபடுகிறது. விரைவில் வரவுள்ள தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளில் அதிகமாக பட்டாசுப் பொருட்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது.

இது தவிர, பிற பண்டிகை மற்றும் முக்கிய நிகழ்வுகளில் பட்டாசுப் பொருட்களால் அதிக ஒலி எழுப்பப்படுவதுடன் காற்றும் அதிகமாக மாசுபடுகிறது. இதன் மூலமாக எங்களுக்கு சுகாதாரமான காற்றை சுவாசிக்க இயலாத நிலை உருவாகும். அதனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டு உள்ளனர்.

பச்சிளம் குழந்தைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வழி இருக்கிறதா என்கிற விவாதத்தை இந்த வழக்கு உருவாக்கி உள்ளது. மனுதாரர்கள் குழந்தைகளாக இருப்பதால் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மூலமாக வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. இருப்பினும், அரசியல் சட்ட விதிமுறைகளின் படி வழக்குத் தொடர அனைத்து குடிமக்களுக்கும் உரிமை இருப்பதால் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

சுற்றுச் சூழலை வலியுறுத்தி பச்சிளம் குழந்தைகள் நீதிமன்றத்துக்கு சென்றுள்ள விவகாரம், புதிய விவாதங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment