அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதில் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த விதிமுறைகளின்படி பணியாற்றிய முந்தைய காலத்தையும் பணி அனுபவமாகக் கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. விண்ணப்பதாரர்களின் பணி அனுபவத்திற்கு அதிகபட்Œமாக 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் என மொத்தம் 34 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். அதாவது, கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணி புரிந்ததற்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கல்வித் தகுதியைப் பொருத்தவரை பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்களும் நெட் அல்லது ஸ்லெட் தகுதியுடன் எம்.பில். முடித்திருந்தால் 6 மதிப்பெண்களும் முதுநிலை பட்டப்படிப்புடன் நெட் அல்லது ஸ்லெட் 5 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
