பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்திற்கு
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும்
குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிசெய்கிறது.
குற்றத்தின் தன்மையைக்கேற்ப மரணத்
தண்டனை அளிக்கவும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - 2013ல் இடமுள்ளது. கடந்த
மார்ச் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையிலும், 21ஆம் தேதி மாநிலங்களவையிலும்
பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.
இதையடுத்து, புதிய சட்டத்திற்கு குடியரசுத்
தலைவர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.
கடந்த ஆண்டு டெல்லியில் மருத்துவ
மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்ததை அடுத்து பாலியல்
வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
பாலியல் வன்கொடுமைக் குற்றங்களில்
ஈடுபடுவோருக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
மேலும் பாலியல் குற்றங்களுக்காக விதிக்கப்படும் ஆயுள்தண்டனையை, குற்றம் புரிந்தவர்
தமது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும் என்பதையும் இந்த மசோதா உறுதி செய்கிறது.
அமில வீச்சு, பெண்களை ரகசியமாகப்
பின்தொடர்தல், தொல்லை தருதல் உள்ளிட்ட பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க
இந்த மசோதாவில் வழிவகுக்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறுமியர் ஆகியோரைப் பாதுகாப்பதற்கான
சிறப்பு அம்சங்கள் திருத்தப்பட்ட இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment