குண்டர் தடுப்பு சட்ட உத்தரவில் கவனக்குறைவை காரணம் காட்டி நெல்லை பழைய கலெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியதுரை. அவர் காற்றாலை மின் பொருட்கள் திருடியதாக பழவூர் காவல் நிலையத்தில் 7 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பழவூர் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்பேரில் பெரியதுரையை அப்போதைய கலெக்டர் செல்வராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 2012ம் ஆண்டு ஏப்ரல் 26ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து பெரியதுரையை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி சண்முகத்தாய் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் சுகுணா, மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் வெங்கடேஷ், செங்குளம் செல்லபாண்டியன் ஆகியோர் வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது, மனுதாரரின் கணவர் ஜாமீனில் வெளிவர வாய்ப்பிருப்பதாக குண்டர் சட்ட உத்தரவில் கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த உத்தரவில் ஒரு வழக்கில் நெல்லை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதால் மற்ற வழக்குகளிலும் நெல்லை நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜாமீன் பெற்ற வழக்கிற்கும், கலெக்டர் சுட்டிக்காட்டியுள்ள வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இரு வழக்குகளும் வெவ்வேறு பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பந்தம் இல்லாத வழக்குகளை சுட்டிகாட்டி ஜாமீனில் சென்று விடுவார் என்று காரணம் காட்டுவது சரியல்ல. இது போன்ற தவறுகளை செய்யக் கூடாது என பல வழக்குகளில் நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது. எனவே, குண்டர் தடுப்பு சட்டத்தை பிறப்பித்த கலெக்டர் செல்வராஜுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இருவரும் அபராதத் தொகையை தங்கள் சொந்த பணத்தில் இருந்து மனுதாரருக்கு வழங்க வேண்டும். பெரியதுரை மீது விதிக்கப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment